திங்கள், 7 ஜனவரி, 2019

அக்கரைப் பச்சை

அக்கரைப் பச்சை 

உறங்கவிடாமல் கண்முன் நின்ற 
கனத்தை நினைவாக்க 
கண்களாய்  இருக்கும் 
பிள்ளைகளின் 
எதிர்காலமதை வளமாக்க 

வளம் சேர்க்க 
நினைத்தபோது எண்ணினேன்,
அதற்கு ஏற்றது
வளர்த்து வரும் நம் தாய்நாடு அல்ல ,
வளர்ச்சியடைந்த அயல்நாடு என்று...

தாய் நாட்டில்  இருந்தபோது 
ஆண்டிற்கு ஒருமுறையும்  
கண்டிறாத   உறவும்கூட 
அடிக்கடி நினைவில் 
ஆடுகிறது அயல்நாடு வந்த பிறகு ... 

அதிகாலை சன்னல் வழிவரும் 
ஆதவக்கதிர்  என்துயில் கலைக்க 
விழிதுடைத்தெழுந்தேன் 

பிறகு அறிந்தேன் 
நம் தாய் நாட்டின் சொர்க்கம் அல்ல 
அயல் நாட்டில் சொப்பனம் என்று,...

பிள்ளை சரும நோயால்
சிரமப்படுகையில் உணர்ந்தேன், 

இயற்கையாய் ஊட்டச்சத்தை 
அள்ளித்தரும்  ஞாயிறு  
நாள்தோறும் உதிக்கும் 
நம் தாய்நாடு  அல்ல,,..

மனித கரத்தால் பிடிக்க முடியாத 
ஆதவனை புட்டியில் 
ஊட்டச்சத்தாய் (வைட்டமின் டி )
அடைத்துவிற்கும் அயல்நாடு  என்று....

பலவண்ண  இலை கொண்ட 
மரத்தின் நிழலில் 
பலர் நிழற்படம் எடுத்தபோது 
நினைத்தேன்,

இளம்பச்சை இலையது 
கரும்பச்சை நிலைகண்டு,
இலைமுற்றி, பால்வற்றி,
இளமஞ்சள் நிறம்தொட்டு, 
சருகாய் தரை தீண்டும்
நம்தாய் நாடு  அல்ல ..

பகலவன் பார்வையின்றி, 
பச்சயம்வற்றி, 
ஒளிச்சேர்க்கை நிகழ்த்தாமல் 
பட்டினியால் வாடி
வதக்கும் வலியதை 
அழகென பார்த்துரசிக்கும் 
அயல்நாடு என்று .....

"அக்கரைக்கு  இக்கரைப்பச்சை "




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக