அறுவகை வினா
ஒன்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்காகவே ஒருவரை ஒருவர் வினவுவது வினா. அப்படி வினவும் வினாக்கள் ஆறு வகைப்படும்.
- 1. அறிவினா
- 2. அறியா வினா
- 3. ஐயவினா
- 4. கொளல் வினா
- 5. கொடை வினா
- 6. ஏவல் வினா
1. அறிவினா:
தாம் அறிந்த (தெரிந்த) ஒன்றை மற்றவரும் அறிந்துள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்படும் வினா அறிவினா.
உதாரணம் : ஓடி விளையாடு பாப்பா பாடலை எழுதியர் யார்?
இதற்கான விடையை ஆசிரியர் தெரிந்திருந்தும் மாணவர் அறிந்துள்ளனரா? என்பதை அறிந்துகொள்வதற்காக கேட்கப்படுவதால் இது அறிவினா.
2. அறியா வினா:
தாம் அறியாத ஒன்றை மற்றவரிடம் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கேட்கப்படும் வினா அறியா வினா.
உதாரணம்: ஐயா, இந்தப் பாடலின் பொருள் என்ன?
மாணவர், தாம் அறியாத ஒன்றை, ஆசிரியரிடம்(மற்றவரிடம்) கேட்டு அறிந்து கொள்ளும் பொருட்டு கேட்கப் பட்டதால் இது அறியா வினா ஆகும் .
3. ஐயா வினா:
தனக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தை (சந்தேகத்தை) அகற்றிக்கொள்ளும் பொருட்டுக் கேட்கப்படும் வினா ஐயவினா.
உதாரணம்: மேலே பறப்பது பருந்தா? காகமா?
ஐயத்தை போக்கிக் கொள்ளும் பொருட்டுக் கேட்கப் பட்டதால், இது ஐயா வினா.
4. கொளல் வினா:
ஒன்றினை மற்றவரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பொருட்டு கேட்கப்படும் வினா கொளல் வினா.
உதாரணம்:
புத்தகக் கடைக்குச் சென்று திருக்குறள் புத்தகம் உள்ளதா? எனக் கேட்டல்.
புத்தகம் இருப்பின் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கேட்கப்பட்டதால் இது கொளல் வினா.
5. கொடை வினா :
ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்கப்படும் வினா கொடை வினா.
உதாரணம் : ஆசிரியர், மாணவனை நோக்கி உன்னிடம் எழுதுகோல் உள்ளதா? எனக் கேட்டல்.
மாணவனிடம் இல்லை என்றால் கொடுக்கும் நோக்கில் கேட்கப்பட்டதால் கொடை வினா.
6. ஏவல் வினா:
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுவதற்காக வினவும் வினா.
உதாரணம்: கண்ணா, கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருவாயா?
இங்கு , கண்ணனை கடைக்குச் சென்று பழங்கள் வாங்கி வருமாறு கேட்கப்படுவதால் இது ஏவல் வினா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக