சனி, 27 ஜூன், 2020

Coronavirus & COVID-19 Overview: Symptoms, Risks, Prevention ...

கொரோனா யார் நீ??


கொடிய உயிர்க்கொல்லி நுண்கிருமி என்கிறார்கள், எத்தனை  உயிர்கொல்லி
 நுண்கிருமிகள் கற்றுத் தராத பாடத்தை நீ கற்றுக்  கொடுத்து விட்டாய்..

 சுத்தத்தினால் வரும் நன்மைகள் என்னென்ன என்பதை  முதல் பாடமாய் கற்றுக் கொடுத்தாய்..


மாணவர்களின் பள்ளிப்படிப்பு வீணானதே என நினைப்பதா?
 வீட்டில் இருந்த நேரத்தில் அவர்களின் கற்பனைத் திறத்தால்,
அவர்களின் கைவண்ணத்தால் எழுந்த ஓவியங்கள் மற்றும்
 பல கைவினைகளைக் கண்டு ரசிப்பதா ...  அல்லது இணையத்தை அவர்கள் கையாளும் விதம் கண்டு வியப்பதா!

 உத்தியோகம் புருஷ லட்சணம் என்றார் போல் பணி முடித்து வரும் கணவனுக்காக காத்திருக்கும் நாட்கள் காணாமல் போனது என நினைப்பதா?? 
இல்லத்தில் அவர் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தில் பிள்ளைகளோடு சிலமணி  நேரம் மௌன விரதம் இருப்பதை நினைத்து மகிழ்வதா??...

பக்கத்து ஊரில் இருக்கும் பாட்டியின் நிலை என்னவோ??
 அடுத்த ஊரில் இருக்கும் அக்காவின் நிலை என்னவோ??
 அன்பை ஊட்டி வளர்த்த அம்மா என்ன செய்கிறாரோ?? என தொலைவிலிருக்கும் உறவுகளின் நினைவுகள்
அருகில் ஊஞ்சலாடுகின்றன தினமும் கனவில்...

உண்ண உணவின்றி உன்னால் மடிந்த பட்டினிச்சாவுகளை எண்ணி கண்ணீர் வடிப்பதா!! 
அல்லது  மனிதர்களின் மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்த உன்னைக் கண்டு வியப்பதா!!

உன்னால் உருவான வலைஒளி ஒளியலைவரிசைகள்தான் எத்தனை !
உனக்காக உருவான பட்டிமன்றங்கள் தான் எத்தனை!

வியாதிகளை வகைப்படுத்தினர் ஏழை வியாதி, பணக்கார வியாதி என்று  ...
என் முன் அனைவரும் சமம் எல்லோருக்கும் ஒரே தீர்ப்பு என்று கூறி அதை நிரூபித்தும் கொண்டிருக்கிறாய்...

பீட்சா , பர்கர் ,துரித உணவுகள் உண்பதே நாகரீகம்  என்று  நினைத்தவர்களின் எண்ணத்தை களைப் பறித்து தமிழ் பாரம்பரிய உணவுகளைத் திரும்பிப்பார்க்க செய்துவிட்டாய் ...

நீ கற்றுத் தந்த பாடங்கள் போதும் என நினைக்கின்றேன்..
விட்டுச் செல் எங்களை ...
நலமோடும் வளமோடும் நாங்கள் வாழ்வதற்கு விட்டுச் செல் எங்களை ..
கற்றுக் கொடுத்தவை போதுமென்று விட்டுச் செல் எங்களை...
 கண்டிப்பாக  நாங்கள் மறக்க மாட்டோம் 
நீ கற்றுத் தந்த பாடங்களை விட்டுச் செல் எங்களை...


    - உமா வினோத்குமார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக