வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

விவசாயி

கதிரவன் கண்விழிக்கும் 
காலைவேளை 
வயல்வெளிக்கு  முதல் 
வணக்கம்  நீ சொன்னாய்..

பசியின்றி பல்லுயிரும் 
இப்புவிவாழ 
படைத்தவனுக்கடுத்த 
நிலை நீ கொண்டாய்..

பணப்பயிர் பயிரிட 
பணமின்றி 
வேளாண்கடன் 
வேலையாக 
வாங்கிக்கிளை 
நாடி சென்றாய்..

ஆண்டு வட்டி அச்சுறுத்த 
இயற்கை சீற்றம் எட்டிப்பார்க்க 
எட்டாக்கனியாய்  கனவிருக்க 
மீளாத்துயர் கொண்டாய்..

துயர்தொலையும் 
காலம் வரை 
துயில் தொலைத்த  
உன் இருவிழிகள்.. 

இன்னலில் இடிபட்டு 
இருளில் அடைபடாதே.. 

பகலவன் பார்க்க 
இருள் விலகும் 
படைத்தவன் பார்க்க 
அருள் விளையும் .. 

தோள் துடைத்தெழுந்து 
மார்தட்டிச்சொல் 
ஏர் தூக்கும் விவசாயி  
நான் என்று.. 


வியாழன், 30 ஆகஸ்ட், 2018

நீ சுவாசமா? சூறாவளியா?

படைத்தவன்  பிறப்பிக்கும் 
பிறப்புக்கள் இறப்பிக்கும் 
வரை பிராணவாயுவை 
நீ தந்தாய் !

பணிக்களைப்பில்  
இளைப்பாற 
பணிக்கு சொத்தான
முத்தான நீர்துளியை 
தட்டிப்பறிக்கும் 
முல்லை மணம் புணர்ந்த 
தென்றலாய்  நீ வந்தாய்! 

நின் கட்டளைக்கு
கட்டுப்பட்டு மரம் 
தலையசைத்தாடா 
கண்ணில் மண்ணூற  
மெய்யிலுன்  உணர்வூற 
மெய்தீண்டிய உன்னை 
கைதீண்டா காற்றாய்  
நீ இருந்தாய் !

நிலையில்லா 
அலைகொண்ட 
நீலக்கடல்  ..
வாரிசுகளை இழந்த 
வனமகள் ..
மரக்கிளை தோரணத்தில்
மறைந்திருந்த வீடுகள் ..
உன் பசிக்கு உணவாக்க 
சூறாவளியாய் 
நீ வந்தாய் !

சுவாசம் தொடங்கி 
சூறாவளி வரை
நின் பணி கண்டு 
வியக்க இப்பாவின் 
சீர்  அடியை 
நீ தந்தாய் !

நீ சுவாசமா? சூறாவளியா?

இப்படிக்கு விளைநிலம்

ஏர் கலப்பை  எனக்களித்த 
எண்ணற்ற காயங்கள் 
என் நிலைமாற்ற 
நீர்பாய்ச்சி இரணமாற்ற 
மனமகிழ்ந்தேன் ..

விளைபொருள் 
சிலயிட்டு 
விளைந்தபொருள்  
பலபெற்றாய்.. 

தீக்கிரையாகியும் 
தீமைபயக்கும் 
மட்காத நெகிழிப்பை 
நின்பயன்பாட்டில் 
என் மெய்தீண்ட 
தரம் குறைந்தேன் ..

மரம் பல அழிக்கப்பட 
மழை பொய்த்துப்போக 
ஊறா கிணற்றடி நீர் 
உதவாமல் எனையாக்க 
தரிசாக
நிலை மாறினேன் ..

தவறிழைத்த நீ 
தண்டனை 
எனக்களித்து  
வேண்டாமென 
விடைகொடுத்தாய் 
வீடானேன் ..




x