வியாழன், 28 ஜனவரி, 2021

பகுபதம், பகாபதம்

 

பகுபத உறுப்பிலக்கணம்

          பதம் - ஒரு எழுத்தோ அல்லது சொல்லோ தொடர்ந்து வந்து பொருள் தருவது பதம். (சொல், அல்லது வார்த்தை, சொற்றொடர், மொழி)

கை, வா, நீ, தீ- ஓரெழுத்து ஒருமொழி

பகுபதம்- பகு- பிரிக்க முடிந்த / பகுக்க முடிந்த  சொற்கள்

பகா பதம் - பகா- பிரிக்க முடியாத / பகுக்க முடியாத  சொற்கள்

பகாபதம் - பிரிக்க முடியாத சொற்கள் 

பகுதி, விகுதி என பிரிக்க முடியாத சொற்கள்  பகாபதம்.

பகாப்பதம் நான்கு வகைப்படும் .

  அவை:

பெயர்ப்பகாபதம் - மரம், நாய், நீ, தீ

வினைப்பகாபதம் - உண், காண், எடு, ஓடு

இடைப்பகாபதம்    - போல்,மன், பிற

உரிப்பகாபதம் - சால ,நனி  தவ

 

பகுபதம்- பிரிக்க கூடிய சொற்கள்.

 பகுபதம்:ஒரு சொல்லை(பதத்தை) பிரித்தால் அவை பின்வரும் உறுப்புகளைக் கொண்டதாக இருக்கும்.

 பகுதி

விகுதி

இடைநிலை

சந்தி

சாரியை

விகாரம்

பகுதி:  ஒரு பகுபதத்தின் முதலில்  வரும் சொல் பகுதி. இது கட்டளை சொல்லாகவே வரும்.எனவே இதனை  முதனிலை, வேர்ச்சொல், அடிச்சொல்  என்றும் கூறுவர் .

பார்த்தான்  -பார்

படித்தான்  - படி

நடந்தான் – நட

 விகுதி: ஒரு பகுபதத்தின் இறுதியில்    வரும் சொல்  விகுதி.

 அன், ஆன்  - ஆண்பால் வினைமுற்று விகுதி

ஆள்-  பெண்பால் வினைமுற்று விகுதி

க  - வியங்கோள் வினைமுற்று விகுதி

ஆர்  - பலர்பால் வினைமுற்று விகுதி

இ  - வினையெச்ச விகுதி

அ - பெயரெச்ச விகுதி

 இடைநிலை:

முதல் நிலைக்கும்(பகுதி) , இறுதி நிலைக்கும் (விகுதி) இடையில் வரக்கூடியது இடைநிலை. இது காலம் காட்டுவதாக அமையும்.

கடந்த காலத்தில் த், ட் ,ற் ,ன்  என்பவை இடைநிலைகளாக வருகின்றன.

கிறு, கின்று, ஆநின்று என்பவை நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள் ஆகும்.

ப், வ், என்பவை எதிகாலத்திற்குரிய இடைநிலைகள் ஆகும்

  சாரியை :

விகுதிக்கும் ,இடைநிலைக்கும்  இடையில் வரும். சாரியை= சார்ந்து நிற்பது. தனக்கென பொருள் எதுவும் இல்லாமல் மற்ற உறுப்புகளுடன் இணைந்து வரும்.

 சந்தி:

பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் வரும். இது பகுதியும் இடைநிலையும்  இணையும் பொது அவற்றை இணைக்க வருவது சந்தி (புணர்ச்சி)

 விகாரம்: மாற்றம்

 விகாரம் என்று தனி உறுப்பு இல்லை. பகுதியும் சாந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி  மட்டும் மாற்றம் அடையலாம். அவ்வாறு மாற்றம் அடைந்து வருவது விகாரம்.

புதன், 20 ஜனவரி, 2021

காலங்கள்(இறந்த காலம், நிகழ்காலம் , எதிர்காலம்)

 

காலங்கள்

            ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகியது என்பதைக் குறித்துக் காட்டும் இலக்கணக் கூறு காலம் ஆகும். ஒரு செயல் பேசப்படும் நேரத்திற்கு முன்னரா,  அல்லது அதே நேரத்திலா அல்லது பின்னரா  என்று குறித்து காட்டுவது காலம். 

காலம் மூன்று வகைகளாக உள்ளன. அவை 

    • இறந்த காலம் 
    • நிகழ்காலம் 
    • எதிர்காலம்

ஒரு வாக்கியத்தில் வினைச்சொற்கள் காலம் காட்டுவதாக அமைகின்றன.

  •     எனக்கு புத்தகம் பிடிக்கும்.
  •    இது அழகான பூ.

மேலுள்ள இரண்டு வாக்கியங்களில் வினைச்சொற்கள் இல்லை. எனவே, இவை எந்த காலம் என்பதை நம்மால் தெளிவாக சொல்ல இயலாது. எனவே, ஒரு வாக்கியம் எந்த காலத்தை சேர்ந்தது என்பதைக் கண்டறிய வினைச்சொற்கள் மிக அவசியம் ஆகின்றது. 

இறந்த காலம்/ கடந்த காலம்:

        ஒரு செயல் நடந்து முடிந்ததைக் குறிக்கும் காலம் கடந்த காலம் / இறந்த காலம். கடந்த காலத்தில் த், ட் ,ற் ,ன்  என்பவை இடைநிலைகளாக வருகின்றனவினைச்சொற்கள் காலம் காட்டுவதாக அமையும்.

உதாரணம்:    நான் கடைக்குச் சென்றேன். (ற் +)

                               ஆசிரியர் பாடம் நடத்தினார்.(த்)

   நிகழ்காலம்

     ஒரு செயல் நடந்துக்கொண்டிருப்பது குறிப்பது நிகழ்காலம்.  கிறு, கின்று, ஆநின்று என்பவை நிகழ்காலம் காட்டும் இடைநிலைகளாக இருக்கும்.

    உதாரணம்: கண்ணன் ஏணியில் ஏறுகிறான்.(கிறு)

                                சிறுவன் ஓடுகின்றான்.(கின்று)

 எதிர்காலம்

ஒரு செயல் இனி நடக்கப்போவதை குறிக்கும் காலம் எதிர் காலம்.

                       ப், வ், என்பவை எதிகாலத்திற்குரிய இடைநிலைகள் ஆகும்.

 உதாரணம் மலர் படிப்பாள்.(ப்)

                             அம்மா கோவிலுக்கு செல்வார்.(வ் )